டெல்லி: இன்றைய நவீன யுகத்தில் உலக நாடுகள் இணையதள சேவையின் வேகத்தை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இணையதள சேவை மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இணைய வேக சோதனை தளமாக உள்ள ஓக்லா, உலகம் முழுக்க உள்ள 139 நாடுகளில் எடுக்கப்பட்ட இணைய வேக வரம்பு பட்டியலில், இந்தியா 131 வது இடம் பிடித்துள்ளது.  இது பாகிஸ்தானை விட பின்தங்கிய நிலை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இன்றைய உலகில் இணையதள  பயன்பாடு மிகவும் இன்றியமையாததாகி விட்டது. உள்ளங்ககையில் உலகையே காணலாம்; அந்த அளவிற்கு விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ந்துள்ளது. அரசு பணியானாலும், தனியார் வேலைவாய்ப்பிலும் கணினி குறித்து அறிந்திருந்தால் மட்டுமே வேலையில் சேரமுடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடங்கி உள்ள நிலையில், இணையதள சேவையின் உதவியுடன்தான் பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்காலக் குழந்தைகளுக்கு சோறூட்டவே இணையதளத்துடனான மொபைல் தேவைப்படும் அளவுக்கு  மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. ஆனால், உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் இணையதள சேவையின் வேகம் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை காணவில்லை. படுமோசமான நிலையிலேயே தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக  ஸ்பீடெஸ்ட் ஓக்லா குளோபல் இன்டெக்ஸ் நிறுவனம்  ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம்  உலகெங்கிலும் இருக்கும் இணையதளத்தின்  வேக வரம்பை ஆய்வு செய்து மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டு வெளியிடுகிறது. அதன்படி, தற்போது அக்டோபர் மாதத்திற்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 139 நாடுகளை உள்ளடக்கிய அந்த பட்டியலில்,   தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, கத்தார் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

இந்தியா, சராசரியாக 12.34 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும், 4.52 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது.  139 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இந்தியா 139 நாடுகளில்  131வது இடத்திலேய இருப்பது தெரிய வந்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான் 106-வது இடத்தையும், நேபாளம்  120-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிராட்பேண்டிற்காக, உலகம் முழுவதும் உள்ள 176 நாடுகளில் எடுக்கப்பட்ட குளோபல் இன்டெக்ஸ் பட்டியலில்,  சிங்கப்பூர், ஹாங்காங், ரூமேனியா, சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகியவை பிராட்பேண்ட் வேகத்தில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது.

இந்தியா நிலையான பிராட்பேண்ட் வேகத்தை பொருத்தவையில் இந்தியா 48.99 எம்பிபிஎஸ் பதிவிறக்கத்தையும், 45.65 எம்பிபிஎஸ் வேக பதிவேற்றத்தையும் பெற்றுள்ளது. இதன் காரணமாக 66-வது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் இந்திய அளவில் ஓக்லா வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்றாம் காலாண்டின் கணக்கீட்டில் Vi 13.74Mbps பதிவிறக்க வேகத்தையும் சராசரியாக 6.19Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது.

ஏர்டெல் 13.58Mbps பதிவிறக்க வேகத்தையும் 4.15Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது.

ஜியோ 9.71Mbps பதிவிறக்க வேகத்தையும் சராசரியாக 3.41Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் இணைய வேகம் மாறுபடுவதாகவுன், அதன்படி, மொபைல் நெட்வொர்க்கின் மூலம் சராசரியாக ஐதராபாத் 14.35 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 4.42 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது. மும்பை 13.55 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 3.75 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும், விசாகப்பட்டினம் 13.40 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 5.16 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.