டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,60,960 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3293 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய  சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உச்சம் பெற்றுள்ளது.  டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உ.பி. தமிழகம், கேரளா உள்பட பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தொற்று பரவலை தடுக்க போர்க்ககால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று  காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,293 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  2,01,187   ஆக உயர்நந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து  கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,48,17,371  பேர் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில்,  29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 14,78,27,367 பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.