டெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்தமார்ச் மாதம் 24ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் தடை செய்யப்பட்டன. விமான போக்குவரத்து சேவையும்  மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. அதைத்த்தொடர்ந்து நவம்பர் மாதம் இறுதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், சரக்கு போக்குவரத்து விமான சேவைகள் மற்றும், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும், இந்தியாவில் சிக்கியிருந்த வெளிநாட்டினரை  அவர்களுக்கு நாடுகளுக்க அனுப்பி வைக்கவும் வகையில்  வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் இயக்கப்பட்டு வந்தன. பின்னர், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,  சில நாடுகளுக்கு பயணிகள் போக்குவரத்து சேவை மற்றும் உள்நாட்டு சேவைகளும் தொடங்கப்பட்டன.

ஆனால், பல நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று பரவல் நீடித்து வருவதால், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடித்து வந்தது. இந்த நிலையில், தற்போது,  சர்வதேச விமான போக்குவரத்து தடை உத்தரவு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதியுடன் விமான சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்து உள்ளது.