ஹைதராபாத்:
ந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக போர் விமான பைலட்டுகள் பணியில் பொறுப்பேற்றனர்.
இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஆண் பைலட்களே ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில்  சமீபகாலமாக, பெண் பைலட்களும், போர் விமானங்களை இயக்கும் பயிற்சி பெற்று வந்தனர். இதில் பயிற்சி முடித்த பீகாரைச் சேர்ந்த பாவனா கந்த், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங் ஆகிய மூன்று பெண் பைலட்களும் விமானப்படையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
இவர்கள் மூவருக்கும் இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான ஹாக் போர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான படையில் பெண் பைலட்களை சேர்ப்பதென மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது.
555
ஐதராபாத் துண்டிக்கல் விமான படை தளத்தில் விமானப் படை பயிற்சி முடித்த இளம் வீரர்களின் அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் மூன்று பெண் பைலட்களும் இடம் பெற்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.
பெண் பைலட் மோகனாவின் தந்தை விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். . அவரது தாத்தாவும் விமானப் படையில் பணி புரிந்தவர். பாவனாவின் தந்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவானியின் தந்தை மத்திய பிரதேச அரசில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இன்று பைலட்டாக பொறுப்பேற்ற மூன்று பெண்களும், “இது எங்கள் வாழ்வின் மறக்க முடியாத நாள். தேசத்துக்காக எங்களை அர்ப்பணிப்போம்” என்று நெகிழ்வுடன் கூறினர்.