ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் தாய்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுனித் சேத்ரி தலைமையிலான அணி 55 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வரலாற்றை படைத்துள்ளது.

india

17வது ஆசிய கோப்பை கால்ப்ந்து போட்டி ஐக்கிய அமீரகத்தில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உட்பட 24 அணிகள் பங்கேற்றுள்ளன. கடந்த 1984, 2011ல் படுதோல்வியை சந்தித்து வெளியேறிய இந்திய அணி, தற்போது கேப்டன் சுனில் சேத்ரி தலைமையில் சாதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஒருபிரிவில் 4 அணிகள் என ஆறு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ள ஏ பிரிவில் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளன. இந்த போட்டியின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்பிறகு லீக் சுற்றின் முடிவில் முதல் இடங்களை ஒவ்வொரு பிரிவிலும் பெறும் அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

football

இந்நிலையில் இன்று இரவு ஏழு மணி மணிக்கு தொடங்கிய முதல் லீக் போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. முதல் போட்டியை வெற்றியுடனே இந்திய அணி தொடங்கியுள்ளது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 27வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்தின் டீராசில் டங்டா 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து தொடங்கிய 2வது பாதி ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-வது நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதற்கு கடைசி வரை போராடியும் தாய்லாந்து அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியாக, இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இது ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பை அரங்கில் 3-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றதே இந்தியாவின் சாதனையாக இருந்து வந்தது.

இந்திய அணி அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட அணிகளை எதிர் கொள்கிறது. இப்போட்டிகளை டிரா செய்தாலே, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது.