கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி, இந்த ஒருநாள் தொடரில் முதன்முறையாக டாஸ் வென்று, முதலில் களமிறங்கியது.

துவக்க வீரர்கள் சோபிக்காத நிலையில், கேப்டன் கோலி அரைசதம்(63) அடித்தார். வழக்கம்போல் ஷ்ரேயாஸ் இந்தமுறையும் சொதப்ப, பெரிதாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 5 ரன்களுக்கே நடையைக் கட்டினார்.

பின்னர், பாண்ட்யாவும், ஜடேஜாவும் ஆட்டத்தைக் கையில் எடுத்து மெதுவாக ஆடத் துவங்கினர். பின்னர், சிறிதுசிறிதாக வேகம் கூட்டிய இவர்கள், சரிந்து கிடந்த ரன் விகிதத்தை பிறகு அதிகப்படுத்தினர்.

பாண்ட்யா, 76 பந்துகளில் 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்களையும் அடித்தனர். ஜடேஜாவின் கணக்கில் 3 சிக்ஸர்கள் அடக்கம். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், 250ஐ தொடுமா என்றிருந்த இந்திய அணி, கடைசியாக 302 ரன்கள் என்ற நல்ல எண்ணிக்கையை எட்டியது.

ஆனால், தற்போது ஆஸ்திரேலியா இருக்கும் நிலைமையில், இந்த ஸ்கோரை பாதுகாத்து, இந்திய அணி வெல்லுமா? என்பது பந்துவீச்சாளர்களின் கையிலேயே உள்ளது.