காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்கி மனித உரிமைகளைக் கொண்டு வர இந்தியாவுக்கு ஐநா வலியுறுத்தல்

ஜெனிவா

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி மனித உரிமைகளை மீண்டும் கொண்டு வர இந்தியாவை ஐநாசபை வலியுறுத்தி உள்ளது.

காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நேற்றுவரை 86 நாட்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  விதி எண் 370 ஐ நீக்கி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து மத்திய அரசு இந்தக் கட்டுப்பாடுகளை விதித்தது.  தற்போது மாநிலம் இரு யூனியன்  பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.   பல இடங்களில் இன்னும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

காஷ்மீரில் இந்த கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் மனித உரிமைகள் மீறல் நடந்துள்ளதாக பாகிஸ்தான் ஐநா சபையிடம் புகார் அளித்தது.  சமீபத்தில் நடந்த ஐநா சபை பொதுக் குழுக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்தன.  முன்னாள் முதல்வர்கள் மூவர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் உள்ளனர்.

ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கோல்விலே, “தற்போது இந்திய அரசு காஷ்மீர் பகுதியில் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.  இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் மீறி போராட்டங்கள் நடைபெறுவதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

பல இடங்களில் இந்த கட்டுப்பாடுகளால் மக்களால் அலுவலகம் செல்லவோ குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவோ முடியாத நிலை உள்ளது.  வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள் இந்திய உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளன.  ஆனால் அந்த மனுக்களை நீதிமன்றம் விரைவாக விசாரிக்காமல் உள்ளது.

நாங்கள் காஷ்மீர் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கருதுகிறோம்.   எனவே இந்திய அரசு இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் மனித உரிமைகள் அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.    தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதாக இந்திய அரசு கூறி வந்தாலும் கட்டுப்பாடுகளை உடனடியாக முழுவதுமாக நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி