இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம்

டில்லி:

ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, இந்திய ரூபாயிலேயே செலுத்த இந்தியா – ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய உடன், ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானில் இருந்து பிற நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4ம் தேதிக்குள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

எனினும், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா விலக்கு அளித்தது.

இதற்கிடையில், ஈரானிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு, யூரோவுக்கு பதில் இந்திய ரூபாயில் பணத்தை செலுத்தும் புதிய ஓப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு தர வேண்டிய தொகையை பாதியளவு பொருட்கள் ஏற்றுமதி செய்தும், மீதித் தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் கீழ், ஈரானுக்கு இந்தியா உணவு தானியங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை மட்டும் ஏற்றுமதி செய்ய முடியும்.

தற்போதுள்ள 180 நாள் தடை விலக்கலின் கீழ், இந்தியா நாளொன்றுக்கு அதிகபட்சமாக 300,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகரும் நாடான இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவைகளில் 80 சதவீத தேவைகளை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக ஈரானில் இருந்து தான் இந்திய அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

நவம்பரில் ஈரானுக்குப் பணம் செலுத்தும் ஐரோப்பிய வழிகள் மூடப்பட்ட பிறகு கப்பல் நிறுவனங்களும் ஈரான் கச்சா எண்ணெயை சுமக்க மறுத்து விட்டது. இதனையடுத்து ஈரான் தன் சொந்தக் கப்பல்கள் மூலம்தான் இந்தியாவுக்கு கச்சா ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு அந்நாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.