இந்தியா- தென்னாப்பிரிக்கா 1நாள் கிரிக்கெட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி

கேப்டவுன்,

ந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற  மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக்  வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இரு அணியினருக்கும் இடையே 3 டெஸ்ட் மேட்ச், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது.

கடந்த 1ந்தேதி முதல் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிகாவில் உள்ள  கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

அதையடுத்து கடந்த 4ந் தேதி நடைப்பெற்ற இரண்டாவது போட்டியிலும்  9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை சுவைத்தது.  இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.  தொடக்கத்தி லேயே ரோகித் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த கோலி களம் இறங்கியதும் ஆட்டம் சூடுபறக்க தொடங்கியது.

கோலிக்கு ஈடாக  தவானும்  பேட்டை சுழற்ற தொடங்கினார். இருவரும் சேர்ந்து தென்னாப்பிரிகாவின் பந்துக்களை அடித்து தூள் கிளப்பினர்.

தவான் 76 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கோலி அதிரடியாக ஆடி 160 ரன்களுடன்  தொடர்ந்து களத்தில்இருந்தார்.

‘நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி  6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்நிலையில் 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.

ஆனால் வந்த வேகத்திலேயே தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடர்ந்து வெளியேற, டும்மினி மட்டுமே அரை சத இலக்கை எட்டினார். இந்நிலையில்   தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து 6 ஒருநாள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.