ஒருநாள் தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட் தகுதி

மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இளம் வீரர் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்ததன் காரணமாக இந்த போட்டியில் விளையாட ரிஷப் பண்டிற்கு இடம் கிடைத்துள்ளது.

rishap

மேற்கிந்திய அணிக்கு எதிராக இந்தியா அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், அக்டோபர் 21ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது. இதில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி இன்று ஹைதராபாத்தில் அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் அதிரடி சதமடித்து முத்திரை பதித்த இளம் வீரர் ரிஷப் பண்ட் ஒரு தொடரில் பங்கேற்கும் அணியில் இடம்பெற்றுள்ளார். மற்றொரு இளம் வீரர் கலீல் அகமதுவுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் எனக்கூறப்பட்ட நிலையில், ஆசியக் கோப்பையில் அளிக்கப்பட்ட ஓய்வுக்குப்ப பின், ஒருநாள் போட்டியில் மீண்டும் கேப்டனாக தொடர்கிறார். ஆசியக் கோப்பை அணியில் இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளில் ஜொலிக்காததால் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார்.

ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சஹல், குல்தீப், முகமது சமி, கலீல் அகமது, ஷர்துல் தாகூர், கே.எல். ராகுல்.

ஒருநாள் தொடரின் முதல் போட்டி கவுகாத்தியில் 21ம் தேதி நடக்க உள்ளது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் 24ம் தேதி நடைபெற உள்ளது.