கொரோனா பாதிப்பு: ஜப்பான், தென்கொரியா நாட்டினருக்கு தற்காலிகமாக விசா நிறுத்தம்!

டெல்லி:

சீனாவை உலுக்கி எடுத்து வரும் கொரோனா, தற்போது ஜப்பான், தென்கொரியா, ஈரான் உள்பல பல நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்த நிலையில், ஜப்பானிய, தென் கொரிய நாட்டினருக்கான வருகைக்கான விசாவை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

ஜப்பான் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்த 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வால் பாதிக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் அனைவரும், அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கப்பல் டயமண்ட் இளவரசி கப்பலில் இருந்த 119 இந்தியர்களையும் 5 வெளிநாட்டினரையும் இந்தியா ஜப்பானிய கடற்கரையில் இருந்து சமீபத்தில் அழைத்து வந்தது.

தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால்,  ஜப்பான் மற்றும் தென் கொரியா நாட்டினருக்கான விசாவை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம்  தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்குதலுக்கு  சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,788 ஆக உயர்ந்ததுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் சீனாவில் மேலும் 44பேர் இறந்துள்ள நிலையில், இது குறைவு என்று அந்நாட்டு சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும்,  78,824 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளது.

சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியா கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோ வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. அதுபோல ஜப்பானிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக,  ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் நாட்டினருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய விசா ஆன் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று இந்திய தூதரகம் டிவீட் செய்துள்ளது.