டெல்லி: அதிகம் பேர் பணியாற்றும் அரசு, தனியார் பணியிடங்களில் வரும் 11ந்தேதி முதல் தடுப்பூசி பேபாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், தடுப்பூசி போடும் பணியையும் மத்தியஅரசு தீவிரப்படுத்தி உள்ளது.  மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், கொரோனா  பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முதல்கட்டமாக கடந்த ஜனவரி 16ந்தேதி  தொடங்கியது.  அப்போது முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், 2வது கட்டமாக மார்ச் 1ந்தேதி முதல்  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டது. 3வது கட்டமாக ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 11ந்தேதி முதல் பணியிடங்களிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பொருளாதாரத்தின் அமைப்பு சார்ந்த துறைகளிலும் வழக்கமான பணி அலுவலகங்கள் (அரசு மற்றும் தனியார்), உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் கணிசமான விகிதத்தில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பணியாற்றுகின்றனர்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து ஏப்ரல் 11ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

100 சதவீத பயனாளர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் கொண்ட இத்தகைய பணித்தளங்களைத் தடுப்பூசி மையங்களுடன் இணைக்க வேண்டும்.

இதற்காக அரசு மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி இந்தப் பணித்தள தடுப்பூசி திட்டப் பணிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.