கோடீஸ்வர குற்றவாளிகளுக்காக வசதியான சிறை கட்டும் இந்தியா

மும்பை

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மல்லையா போன்ற கோடீஸ்வர குற்றவாளிகளை அடைக்க அனைத்து வசதிகளுடன் ஐரோப்பிய பாணியில்  சிறைச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்திய தொழில் அதிபரான விஜய்மல்லையா வங்கிக் கடன் செலுத்தாமல் தண்டனைக்கு பயந்து நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார்.  அவரை மீண்டும் இந்தியா அழைத்து வர அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.    ஆனால் இந்தியாவுக்கு வர விஜய் மல்லையா மறுத்துள்ளார்.  இந்திய சிறைச்சாலைகள் சுகாதாரமற்று இருப்பதாகவும் எவ்வித வசதிகளும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பையில் அமைந்துள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலை மிகவும் பழமை வாயந்ததாகும்.   இந்த சிறைச்சாலையின் ஒரு பகுதியை இந்தியா நவீன வசதிகளுடன் வடிவமத்தது.    அந்த பகுதியின் தரைகளிலும் சுவற்றிலும் புது டைல்ஸ் பொருத்தப் பட்டது,   காற்றோட்டமாகவும்  நவீன வசதி உள்ள கழிப்பறைகளுடனும் மாற்றி அமைக்கப்பட்ட இந்த சிறைச்சாலையின் வீடியோ பதிவை லண்டன் நீதிமன்றத்துக்கு இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் ஒரு பகுதியை இடித்து விட்டு ஐரோப்பிய பாணிகளுடன் நவீன வசதிகளுடன் மேலும் சிறைச்சாலை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.   இதற்காக அந்த பகுதியை இடிக்க ஒப்பந்தப் புள்ளிகளை பொதுப்பணித்துறை கேட்டுள்ளது.   இந்த சிறைப்பகுதி கோடீஸ்வர  குற்றவாளிகளை அடைக்க பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.