டில்லி:

முப்படைகளுக்கும் ஒரே தளபதியாக ராணுவ தளபதியான பிபின் ராவத் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டின் மூன்று படைகளான தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று பாதுகாப்பு படைகளுக்கும் தற்போது தனித்தனி தளபதிகள் உள்ள நிலையில்,  முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி நியமிக்கப்படுவார் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளின்படி ஐந்து நடச்சத்திர அந்தஸ்து கொண்ட பாதுகாப்பு அதிகாரியே முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட வேண்டும். இந்த நிலையில், இராணுவ தலைமைத் தளபதியான பிபின் ராவத், அந்த பதவிக்கு நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1962ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரின்போது,, இந்தியாவின் முப்படைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் விமானப்படை முழுமையாகப் பயன்படுத்தப்பட வில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல, 1965ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற  போரின் போது இந்திய கடற்படையிடம் பல்வேறு முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வில்லை என்று குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டது.

இதையடுத்து, 1971ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் போரின்போது அன்றைய இந்திய இராணுவ தளபதி சாம் மானெக் ஷா திறமையாக செய்லபட்டகதாவும்,  விமானப்படை, கடற்படை தளபதி களுடன் கலந்தாலோசித்து அவர் செயல்பட்டதே பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமா என்றும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்தே 1999ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் நடைபெற்ற  கார்க்கில் போரின்போதும், முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றது. அப்போது, இது தொடர்பாக துணை பிரதமர் எல்.கே.அத்வானி தலைமையில் கார்கில் மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடத்தியது. அதன்படி,  இராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ஒரே தலைமைத் தளபதியை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர்  மனோகர் பாரிக்கர் இது தொடர்பாக பரிசீலனை செய்து வந்தார்.  தொடர்ந்து,  ஒரே தளபதி திட்டத்தை செயல் படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மத்தியஅரசு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. விரைவில் ஒரே தளபதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.