துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு 11,000 டன் வெங்காயம் இறக்குமதி

டில்லி

சுமார் 11000 டன் வெங்காயத்தை துருக்கியில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால் பயிர்கள் நாசமானதால் நாட்டில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.    நாட்டின் பல நகரங்களில் தட்டுப்பாடு காரணமாக வெங்காய விலை ரூ.75 முதல் ரூ.125 ஆக உயர்ந்துள்ளது.   இந்த தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகளில் இருந்து சுமார் 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யக் கடந்த மாதம் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில், “நாடு முழுவதும் உள்ள உள்நாட்டுச் சந்தைகளில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வரிசையில் உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ஆகவே எகிப்து நாட்டிலிருந்து 6,090 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ளும் வகையில் பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இவ்வாறு எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வெங்காயம்  வரும் ஜனவரியில் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தைப் பொதுமக்களுக்குக் கிலோ ரூ.52-55 என்ற விலையில் மத்திய அரசு வழங்கப்படும்” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி