டில்லி

ந்தியாவுக்கு என தனி விண்வெளி மையம் சுகன்யான் திட்டத்துக்கு பிறகு அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையம் தொடங்கப்பட்டது.  இந்த மையத்தை ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, அமெரிக்காவின் நாசா, ஜப்பானின் ஜாசா, கனடாவின் சிஎஸ்ஏ மற்றும் ரஷ்ய நாட்டிப் ரோஷ்காஸ்மஸ் ஆகிய அமைப்புகள் இணந்து அமைத்துள்ளன.

விண்வெளியில் இயங்கும் இந்த மிகப் பெரிய ஆய்வுக் கூடத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வு நடத்த சென்று வருகின்றனர்.   தற்போது சீனா தங்கள் நாட்டுக்கு என தனியாக ஒரு விண்வெளி மையம் அமைத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய  விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோவின் தலைவர் சிவன் நேற்று செய்தியாளர்களிடம், “சந்திராயன் 1 வெற்றி பெற்றதை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.   சுகன்யான் என அழைக்கப்படும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2022க்குள் செயல்படுத்தப்படும்.

இந்தியாவுக்கு என தனியாக ஒரு விண்வெளி மையம் அதற்குப் பின் அமைக்கப்பட உள்ளது.   இந்த மையம் மிகவும் சிறியதாக இருக்கும்.  இது சர்வதேச விண்வெளி மையத்தின் அங்கம் கிடையாது. சுமார் 20 டன் எடை கொண்ட இந்த நிலையம் குறித்த பணிகள் சுகன்யான் திட்டம் முடிவடைந்ததும் தொடங்கும்.

சுகன்யான் திட்டத்துக்கு பிறகு இந்த விண்வெளி மையம் அமைப்பது குறித்த திட்ட வரைவு அரசுக்கு அனுப்பி அனுமதி பெறப்படும்.   இந்த அனுமதிக்கு பிறகு 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு என தனி விண்வெளி மையம் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.