“தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை” – இந்தியா பங்கேற்க முடிவு

ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆப்கானி்ஸ்தானில் தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. எனினும் அந்நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்தி வருகின்றனர். இதனால் மறுசீரமைப்பு முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

taliban

இதனால் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷ்யா முன் வைத்தது. ஆனால் அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா தயக்கம் காட்டியது. ஆப்கானிஸ்தான் அரசும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

எனினும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல நாடுகளும் தயக்கம் காட்டியதால் இது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் தலிபான் அமைப்பினரும் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்க ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவு துறை தெரிவித்து தகவலில் “ பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளும். ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் சீரமைப்பு மேற்கொள்ள எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் இந்தியா வந்தபோது, இந்த பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது, ஆப்கானிஸ்தானில் ரஷ்யா மேற்கொள்ளும் அமைதி முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகளான அமர் சின்ஹா மற்றும் ராகவன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின் இத்தகைய அறிவிப்புக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது.