பங்குச் சந்தையில் சீன முதலீட்டுக்குக் கட்டுப்பாடு விதிக்க உள்ள இந்தியா

டில்லி

டாக் பகுதியில் சீனா நடத்திய தாக்குதலில் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தையில் சீன முதலீட்டுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக் பகுதியில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர்.  இது நாடெங்கும் க்டும் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது.   இதையொட்டி சீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்னும் குரல் அதிக அளவில் எழுந்துள்ளது.  தற்போது இந்தியாவில் பெருமளவில் சீனப் பொருட்கள் விற்பனை உள்ளதால் இது வாடிக்கையாளர் மத்தியில் கடும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து உலக வர்த்தக நிறுவனத்தின் முன்னாள் தூதர் ஜயந்த் தாஸ்குப்தா, “சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியா மிகவும் நஷ்டமடையும்.  குறிப்பாக மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களில் நாம் சீனப் பொருட்களை நம்பி உள்ளோம்.  அத்துடன் ரயில் பெட்டிகள், மருந்து பொருட்கள் உற்பத்தியிலும் சீன பொருட்கள் தேவை உள்ளது.

பல துறைகளில் உலகின் மற்ற நாடுகளை விடச் சீன உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் நமக்கு வேறு ஒரு விநியோக நாடு கிடைக்காது.

எனவே நாம் ஒரு அறிவுப்பூர்வமான முடிவை எடுப்பது நல்லதாகும்.  தினசரி உபயோகப் பொருட்களை நாம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் அவற்றைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கலாம்.   ஆனால் பெரிய அளவிலான தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை அளிக்க வேறு நாடுகள் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீன முதலீட்டாளர்கள் பல இந்திய நிறுவனங்களில் தங்கள் வெளிநாட்டு முதலீட்டைச் செய்துள்ளனர்.   கடந்த மார்ச் மாதம் சீன மக்கள் வங்கி தனது இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டை 0.8% இருந்து 1.1% ஆக அதிகரித்துள்ளது.  எனவே சீன முதலீடுகள் தொடருமா என்பது குறித்துப் பல நிறுவனங்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா தனது பங்குச்  சந்தையில் சீன முதலீடு குறித்துப் பல கட்டுப்பாடுகள் விதிக்க எண்ணுவதாகப் பெயர் தெரிவிக்க விரும்பாத பொருளாதார விவகாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   இந்த கட்டுப்பாடுகள் குறித்து நிதி அமைச்சகம் மற்றும் செபி உள்ளிட்டவை ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த அதிகாரி, “அமெரிக்காவைப் போல் இந்தியாவும் சீனாவுடன் வர்த்தக போருக்கு ஆயத்தமாகி வருகிறது.  இதனால் பாதிக்கப்படப் போவது இந்திய உள்நாட்டு வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆவார்கள்.  அவசியம் குறைந்த தினசரி உபயோகப் பொருட்களை உள்நாட்டு உற்பத்தி செய்வதை ஆதரிக்கலாம்.  ஆனால் பல தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்களை மட்டுமாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யலாம்” எனத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.