சென்னை:

ராணுவ தளவாட பொருட்களுக்கு பெரும்பாலும் இந்தியா ரஷ்யாவை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. ரஷ்யாவுடன் ஆயுத இறக்குமதியை இந்தியா நீண்ட நாட்களாக மேற்கொண்டு வருகிறது. 2012 முதல் 2016ம் ஆண்டு வரை இந்தியாவின் 68 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

1960ம் ஆண்டு முதல் ரஷ்யா தான் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விற்பனையாளராக இருந்து வருகிறது. இந்திய விமானப் படைக்கு எம்ஐஜி 21 சூப்பர் சோனிக் போர் விமானங்கள் வாங்கப்பட்டது. தற்போது இந்த ஆயுத இறக்குமதியை படிப்படியாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைக்கு மாற்றாக நம் நாட்டிலேயே ஒரு ஏவுகணையை தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரம்மோஸ் வின்வெளி திட்ட தலைமை செயல் அலுவலர் சுதிர் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ எதிர்கால பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரித்தவையாக இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏவுகணையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதம் இடம்பெறும். இதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை’’என்றார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு 2025ம் ஆண்டு வரை ராணுவ நவீனமயமாக்கலுக்கு மோடி அரசு 250 பில்லியன் டாலரை செலவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தும் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் 17 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.