ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் பிஎஸ்-6 ரக சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனை! ஐஓசி

டெல்லி:

ப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் பிஎஸ்-6 ரக சுத்தமான பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிவித்து உள்ளது.

நாட்டில் பெருகி மாசுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனை ஊக்குவிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.  அதன்படி, தற்போது உபயோகப்படுத்தி வரும் யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு மாற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங், ” பிஎஸ்-6 வாகனங்களுக்கு ஏற்றார்போல் சல்பர் குறைவாக இருக்கும் பெட்ரோல், டீசலை உற்பத்தி செய்யும் பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஏற்கெனவே சுத்திகரிப்பு மேம்பாட்டுக்காக ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளன,

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பிஎஸ்-6 பெட்ரோல், டீசலை நாடுமுழுவதும் விநியோகம் செய்வதற்கான பணியைத் தொடங்கி விடுவோம். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசல் அனைத்து முகவர்களிடம் கிடைக்கத் தொடங்கிவிடும்.

கடந்த 6 ஆண்டுகள் நீண்ட பயணத்தில் பிஎஸ்-4 ரக பெட்ரோல், டீசலில் இருந்து பிஎஸ்-5 ரகத்துக்குச் செல்லாமல் நேரடியாக பிஎஸ்-6 ரக எரிபொருட்களுக்கு மாறுகிறோம். இதை கடந்த 3 ஆண்டுகளில் எட்டியுள்ளோம். கடந்த 2010-ம் ஆண்டில் பிஎஸ்-4 ரக எரிபொருள் அறிமுகம் செய்யும் போது பெட்ரோல், டீசலில் சல்பர் 350 பிபிஎம் இருந்தது. ஆனால் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசலில் 50 பிபிஎம் அளவுக்குக் குறைக்கப்படும்.

உலகில் மிகவும் தரமான, சுத்தமான பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசலை நம் நாடு ஏப்ரல் 1-ம் தேதி வழங்குகிறது. அன்றுமுதல் இந்த பெட்ரோல் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும்   கிடைக்கும்.  உலகின் எந்தநாட்டிலும் இதுபோன்ற தரமான பெட்ரோல், டீசலை பெற முடியாது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் மட்டுமே இத்தகைய தரமான எரிபொருட்களைப் பெற முடியும்

இவ்வாறு ஐஓசி தலைவர் தெரிவித்தார்.

டெல்லி உள்பட அதன் சுற்றுப்பகுதிகளில் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசல் விற்பனை கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்து விட்டது. தற்போது  வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும்  நடைமுறைக்கு வர உள்ளது.