காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலையும் சேருங்கள்: இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: வரும் 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலையும் சேர்க்க வேண்டுமென பிரிட்டன் விளையாட்டுத் துறை அமைச்சர் நிக்கி மோர்கனை வலியுறுத்தியுள்ளார் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.

பொருத்தமான இடவசதி இல்லை என்பதைக் காரணம் காட்டி, பெர்மிங்ஹாம் ஒருங்கிணைப்பு கமிட்டியானது, 2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலிருந்து துப்பாக்கிச் சுடுதலை நீக்கியது.

ஆனால், துப்பாக்கிச் சுடுதல் இல்லையென்றால், போட்டியை புறக்கணிப்போம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்திடமிருந்து அறிவிப்பு வெளியானது.

எனவே, இதுதொடர்பாக, பிரிட்டன் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடந்த 1974ம் ஆண்டிலிருந்து காமன்வெல்த் போட்டியின் ஒரு அங்கமாக திகழும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்த முடிவு துப்பாக்கிச் சுடுதலை அவசியமான விளையாட்டாக கருதவில்லை என்ற கருத்தை உருவாக்குவதாகவும், இந்திய மக்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி குறித்து அதிக ஆர்வம் நிறைந்தவர்கள்” என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.