டெல்லி:

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக  இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில்  ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 20ந்தேதி உஸ்பெகிஸ்தான் நாட்டின்  உள்துறை அமைச்சா் புலாத் போபோஜோனோவ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வருகை தந்தது. இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,  பயங்கரவாத எதிா்ப்பில் இருதரப்பும் நல்லுறவை வலுப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடா்பாக இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

அதைத்தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரா்களுக்கு எல்லைப் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை  தொடர்பாக இந்தியாவில் பயிற்சியளிக்க இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்ட உள்ளது.

மேலும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருவது தொடா்பாக தலைவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள், குற்றங்களைத் தடுப்பது, கடத்தல் சம்பவங்களைத் தடுப்பது உள்ளிட்டவற்றில் இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.