வாஷிங்டன்

ஞ்சா மற்றும் கஞ்சா பிசின் ஆகியவை அபாயகரமான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா எடுத்த முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா சபை ஆணையத்தில் அதிக அபாயமுள்ள போதைப் பொருள் பட்டியலில் 1961 ஆம் ஆண்டு கஞ்சா சேர்க்கப்பட்டது.   உலகெங்கும் பல நாடுகளில் கஞ்சா பயன்படுத்துதல் மிகப் பெரிய குற்றமாக  உள்ளது.    மருத்துவ பயன்பாட்டுக்குக் கஞ்சா மற்றும் கஞ்சா பிசின் பயன்படுத்தவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் கஞ்சாவைப் பயிரிட, உருவாக்க, வைத்திருக்க, விற்க, வாங்க,, எடுத்துச் செல்ல, மற்றும் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சரஸ் என அழைக்கப்படும் கஞ்சா பிசின் என்பதும் கஞ்சாவில் இருந்து எடுக்கப்படுவதால் அதுவும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.   போதை மருந்து தடுப்பு ஆணையம் சமீபத்தில் நடிகை ரியா சக்ரவர்த்தி, அவர் சகோதரர் ஷோவிக் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த பலர் மீது  கஞ்சா பயன்படுத்தியதாக வழக்கு பதிந்தது.

இதில் ரியா ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டு அக்டோபரில் ஜாமீன் அளிக்கப்பட்டது.  ஷோவிக் மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த புதன்கிழமை ஜாமீனில் வெளி வந்தார்.  இதுவரை 20க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2019 ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் கஞ்சாவை அபாயமான போதை மருந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரைகள் அளித்தது.  இந்த பரிந்துரைகள் ஐநா குழுவில் இந்த வருடம் மார்ச் மாதம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.   இது குறித்து வாக்களிக்கக் குழு உறுப்பினர்கள் கால அவகாசம் கேட்டதால் வாக்கெடுப்பு அப்போது தள்ளி வைக்கப்பட்டது

கடந்த புதன் கிழமை நடந்த ஐநா ஆணையத்தின் குழுக் கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 53 நாட்டுப் பிரதிநிதிகளில் இந்தியா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 27 பேர் நீக்கத்துக்கு ஆதரவு வாக்கு அளித்தனர்.  இதற்கு எதிராகச் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகள் வாக்களித்தன.  உக்ரைன் நாட்டுப் பிரதிநிதி வாக்களிக்கவில்லை.  இந்த கூட்டத்துக்குப் பாகிஸ்தானின் ஆஃப்கன் நாட்டு தூதரான மன்சூர் அகமதுகான் தலைமை வகித்தார்.

வாக்கெடுப்பின் முடிவுகளுக்கு ஏற்ப கஞ்சா மற்றும் கஞ்சா பிசின் அபாயகரமான போதைப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் கஞ்சாவை மருத்துவ பயன்பாட்டுக்களுக்கு உபயோகப்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்பை ஐநா ஆணையம் கடந்த 2 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.