தர்மசாலா:

4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு இன்னும் 87 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இதன் மூலம் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்தியாவுக்கு நெருங்கி வந்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாச்சல் மாநிலம் தர்மசாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதையடுத்து 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 118.1 ஓவர்கள் முடிவில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைவிட 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

2-வது இன்னிங்சில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரென்ஷா(8 ரன்கள்), வார்னர்(6 ரன்கள்) ஆகியோரை உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு அனுப்பினார். இதன்பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் அபாயகரமான வீரருமான ஸ்மித்தை 17 ரன்களில் குமார் போல்டு ஆக்கினார்.

ஹாண்ட்ஸ்கோம்ப் 18 ரன்களில் அஷ்வின் பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்ஷ் 1 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். மேக்ஸ்வெல் 45 ரன்களில் வெளியேறியதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 53.5 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஆஸ்திரேலிய அணி 137 ரன்களில் ஆட்டம் இழந்தது.

ஏற்கனவே 32 ரன்கள் ஆஸ்திரேலிய அணி பின் தங்கியிருந்ததால் இந்திய அணிக்கு 106 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 106 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்தது.

லோகேஷ் ராகுல் 13 ரன்களுடனும், முரளி விஜய் 6 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். வெற்றி பெற இன்னும் 87 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்னும் 2 நாள் மற்றும் 10 விக்கெட்கள் கைவசம் இருப்பதால் இந்தியாவின் வெற்றி நிச்சயமாகிவிட்டதாக தெரிகிறது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடரையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக 4வது டெஸ்ட் போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.