கொல்கத்தா

கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கான தினசரி கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்க தேச கிரிக்கெட் அணி தனது இந்தியப் பயணத்தில் இரு டெஸ்ட் பந்தயங்களில் விளையாட உள்ளது.  முதல் டெஸ்ட் பந்தயம் நவம்பர் 14 முதல் 18 வரை இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இரண்டாம் டெஸ்ட் பந்தயம் நவம்பர் 22 முதல் 26 வரை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.   இந்த டெஸ்ட் பந்தயம் முதல் பகல் இரவு டெஸ்ட் பந்தயமாக நடைபெறுகிறது.

வழக்கமாகப் பகல் இரவு பந்தயங்கள் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்   ஆனால் இந்த பந்தயங்கள் பகல் 1.30 மணிக்குத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த போட்டியைக் காணப் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவர்களும் ஆர்வத்துடன் உள்ளதால் 1.30 மணிக்குத் தொடக்கி 8.30 மணிக்கு முடிப்பதன்  மூலம் அவர்கள் சீக்கிரமாக வீடு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 68000 பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் நுழைவுக் கட்டணம் சலுகை விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கட்டணங்கள், ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.150 என மூன்று வகையில் இருக்கும்.   இவ்வாறு சலுகை விலையில் கட்டணங்கள் உள்ளதால் பல ரசிகர்கள் போட்டியைக் காண வரலாம் என வங்காள கிரிக்கெட் வாரிய தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார்.