அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது & பகலிரவு டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.

இந்தப் போட்டி, பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.

அகமதாபாத் மொட்டீரா மைதானத்தில் முதல்முறையாக 7 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஆட்டம் நடைபெறுவதால், இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையுமா அல்லது வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்குமா? எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆடுகளத்தில் லேசாகப் புற்கள் காணப்படுவதால், வேகப்பந்து வீச்சுக்கும், ஸ்விங் செய்யவும் மைதானம் ஒத்துழைக்கும் என ஒருபுறம் இங்கிலாந்து வீரர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இருந்ததைப் போன்றுதான் முதல் நாளில் இருந்தே பந்துகள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆதலால், நாளை பிற்பகல் வரை இரு அணிகளிலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது உறுதியில்லாமல் இருக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய மைதானமான மொட்டீரா மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரலாம். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக 50% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.