2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு..!

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

india

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கவுகாத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அற்புதமாக விளையாடிய ஹெட்டிமர், 76 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித்-கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய கோலி ஒருநாள் போட்டியில் தனது 36வது சதத்தைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவும் ஒருநாள் போட்டியில் தனது 20வது சதத்தைப் பதிவு செய்தார். இந்திய அணி 42.1 ஓவரிலேயே வெறும் 2 விக்கெட்டை மட்டும் இழந்து, 326 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியை வென்றது.

இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, புதன்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து, அந்தப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, முதல் போட்டியில் பங்கேற்ற அணியே இந்தப் போட்டியிலும் விளையாட உள்ளது.

இந்திய அணி வீரர்களின் விவரம்:
விராட் கோலி(கே), ஷிக்கர் தவான், ரோஹித் சர்மா, அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கலீல் அஹமது.