வெஸ்ட் இண்டிஸ் அணியை திணறடித்த இந்தியா – முதல் நாள் ஆட்டத்தில் 364 ரன்கள் குவிப்பு

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்களை குவித்துள்ளது.

ind

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்குத் திரும்பினார்.

மற்றொரு புறம் தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா, புஜாராவுடன் இணைந்து பந்துகளை சிதறடித்தார். தனது முதல் போட்டியிலேயே சதமடித்த பிரித்வி ஷா 154 பந்துகளில் 134 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய புஜாராவும் 86 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரஹானே 41 ரன்களில் வெளியேற, இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து சுமார் 364 ரன்களை குவித்துள்ளது. கேப்டன் கோலி 72 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 17 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.