டில்லி:

பாகிஸ்தானில் நடைபெற உள்ள  டேவிஸ் கோப்பை போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற இந்திய டென்னிஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை போட்டிகள் செப்டம்பர் 14, 15ம் தேதிகளில்  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆசனால், தற்போது ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை  தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றமான  சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவர் பிரவீன் மகாஜன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆசியா ஓசியானியா குரூப் 1 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மகேஷ் பூபதி தலைமையிலான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார், ரோகன் போபண்ணா, திவிக் சரன் அடங்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச டென்னிஸ் சங்கம்  நிராகரித்தால், பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை இந்தியா  ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது.