டில்லி

ஜெனிவா போர் ஒப்பந்தப்படி போர்க்கைதியாக பிடிபட்டுள்ள அபிநந்தனை பாகிஸ்தான் நன்கு கவனித்து திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா கூறி உள்ளது.

இன்று இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்த விமானத்தை ஓட்டிய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் போர்க்கைதியாக பிடிபட்டுள்ளார். இந்திய அரசு முதலில் அவர் காணாமல் போனதாக அறிவித்தது. அதன் பிறகு இன்று மாலை அவர் பாகிஸ்தானிடம் பிடிபட்டதை தெரிவித்தது.  இந்தியா அவர் ஜெனிவா போர்க்கைதிகள் ஒப்பந்தப்படி நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது..

கடந்த 1929 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த சர்வதேச ஒப்பந்தம் அதன் பிறகு 1949 ஆம் வருடம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் திருத்தப்பட்டது. இரு நாடுகள் அல்லது சர்வதேச நாடுகளுக்கு இடையில் போர் மூளும் போது மற்றொரு நாட்டினரிடம் சிக்கும் ராணுவத்தினர் போர்கைதிகள் என அழைக்கபடுகின்றனர்.

”போர்க்கைதிகள் எப்போதும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர்கள் மீது நடத்தப்படும் எவ்வித தாக்குதலும் சட்ட விரோதமானதாகும். அத்துடன் அவருக்கு மரணம் அல்லது உடல்நலக்கேடு ஆகியவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பிடித்த நாட்டின் கடமை ஆகும். அது மட்டுமின்றி அவரை பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் தாக்கவோ அவமானப்படுத்துவதோ தவறாகும்” என ஜெனிவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள்து..

இந்தியா அளித்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் காயமுற்ற வீரரின் படத்தை வெளியிட்டுள்ளது சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் ஜெனிவா போர் ஒப்பந்தத்தையும் மீறும் செயலாகும். தன்னிடம் சிக்கிய இந்திய ராணுவ வீரருக்கு முழுவதும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பாகிஸ்தான் கடமை ஆகும். அவ்ரை பத்திரமாக கவனித்து உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.