புதுடெல்லி: எதிர்வரும் 2027ம் ஆண்டு நடக்கவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு இந்தியா சார்பில் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். கடந்த 2019ம் ஆண்டு இத்தொடர் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்த தொடர்(2023ம் ஆண்டு) சீனாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2027ம் ஆண்டுக்கான தொடரை நடத்துவதற்கு இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 5 நாடுகள் தரப்பில் விண்ணப்பம் செய்யப்பட்டன.
இதில், இந்தியா, செளதி அரேபியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் இத்தொடரை இதுவரை நடத்தியதில்லை. எனவே, இந்த மூன்று நாடுகளில் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, வரும் 2022ம் ஆண்டு நடக்கவுள்ள பெண்கள் ஆசியக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.