டில்லி

பாகிஸ்தான் நாட்டு மில்லி முஸ்லீம் லீக் கட்சியை பயங்கரவாதக் கட்சியாக அமெரிக்கா அறிவித்ததை இந்தியா வரவேற்றி பாராட்டி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் ஒன்று ஹஃபிஸ் சையத் தலைமையில் உள்ள மில்லி முஸ்லிம் லீக் ஆகும்.   இந்தக் கட்சிக்கும் பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ தொய்பாவுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப் படுகிறது.   அதை ஒட்டி கடந்த 2017ஆம் வருடம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இந்தக் கட்சியை தேர்தலில் போட்டியிட தடை விதித்தது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.   அதை ஒட்டி தேர்தல் ஆணையம் மில்லி முஸ்லீம் லீக் கட்சியும் தேர்தலில் பங்கு பெற அனுமதி கோரியது.   தேர்தல் ஆணையம் இந்தக் கட்சி உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தகுதி சான்றிதழ் பெற்ற பிறகு அரசியல் கட்சியாக அங்கீகாரம் அளிக்கப்படும் என தெரிவித்தது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்த அடுத்த நாள் அமெரிக்க அரசு மில்லி முஸ்லீம் லீக் கட்சியை ஒரு பயங்கரவாதக் கட்சி என அறிவித்தது.   ஏற்கனவே அமெரிக்க அரசால் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்ட லஷ்கர் ஈ தொய்பாவுடன் இந்தக் கட்சிக்கு தொடர்பு உள்ளதால் இவ்வாறு அறிவிக்கப் பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.  இந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “மில்லி முஸ்லீம் லீக் கட்சியை பயங்கரவாதக் கட்சி என அமெரிக்கா அறிவித்தமைக்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த அறிவிப்பின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது தெளிவாகி விட்டது.   லஷ்கர் ஈ தொய்பாவின் ஆதரவுக் கட்சியை பயங்கரவாதக் கட்சி என அறிவித்ததற்கு அமெரிக்காவுக்கு இந்தியா பாராட்டுக்களை தெரிவிக்கிறது.”  எனக் கூறி உள்ளார்.