இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு : மேற்கு வங்க நிறுவனம் சாதனை

--

கொல்கத்தா

ரூ, 500 செலவில் கொரோனா சோதனை செய்யக்கூடிய ஒரு கருவியை மேற்கு வங்க மாநிலம் ஜிசிசி பயோடெக் நிறுவனம் கண்டு பிடித்து ஐசிஎம்ஆர் அனுமதிக்குக் காத்திருக்கிறது.

கொரோனா தாக்குதல் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.  எனவே கொரோனா  பரிசோதனை அதிக அளவில் நடைபெறுகிறது.  இந்த பரிசோதனைக்காகச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தரமற்றவையாக இருந்ததால் அவை திருப்பி அனுப்ப பட்டன.  தற்போது கொரியா போன்ற நாடுகளில் இருந்து கருவிகள் வாங்கப்படுகின்றன.

இந்தியாவில் இத்தகைய கருவிகள் கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.  அவ்வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜி சி சி பயோடெக் என்னும் நிறுவனம் ஒரு கொரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்கி உள்ளது.   இதற்காக இரு மாத ஆராய்ச்சிக்குப் பிறகு  உருவாக்கப்பட்ட இக்கருவிகள் ஐ சி எம் ஆர் (இந்திய மருத்துவ ஆய்வுக் குழு) வின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

இதுவரை இந்நிறுவனம் சுமார் 1 கோடி கருவிகளை உருவாக்கி உள்ளதாகவும் ஐ சி எம் ஆர்  அனுமதி கிடைத்த பிறகு தினமும் 3 லட்சம் சோதனை செய்தாலும் அதற்கேற்ப கருவிகள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  இந்த கருவியின் உதிரிப்பாகங்களையும் இந்த நிறுவனமே தயாரிக்கிறது,  இந்த கருவி மூலம் சோதனை செய்ய ரூ. 500 மட்டுமே செலவாகும் எனக் கூறப்படுகிறது.