உலக மக்கள்தொகை – அடுத்த நூற்றாண்டில் இந்தியாதான் டாப்..!

--

ஜெனிவா: வரும் 2100ம் ஆண்டில், உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்றும், அப்போது உலகின் மொத்த மக்கள்தொகை 1100 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும் ஐ.நா. அவை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 21ம் நூற்றாண்டின் முடிவில், உலக மக்கள்தொகை எப்படியும் 1100 கோடியைத் தாண்டிவிடும் என்று ஐ.நா. சபை கடந்த 2015ம் ஆண்டே கணித்திருந்தது.

தற்போது, அந்த அவையின் கூற்றுப்படி, “2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 805 கோடியாக அதிகரிக்கும். 2050ம் ஆண்டில் 970 கோடியாக உயரும். 2100ம் ஆண்டில் 1,090 கோடியை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்விதழான லான்செட் ஆய்வில், “2100ல் இந்தியாவின் மக்கள்தொகை 109 கோடியாகக் குறையும். அதேபோல், சீனா மக்கள் தொகையும் 73 கோடியாகக் குறையும். தற்போது உள்ளதைக் காட்டிலும் நைஜீரியா உள்ளிட்ட சில ஆப்ரிக்க நாடுகளின் மக்கள்தொகை கணிசமாக அதிகரிக்கும். உலகின் முதல் 10 அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் இடம்பிடிக்கும். மொத்தத்தில் இந்தியா உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும். அதை அடுத்து நைஜீரியா இரண்டாவது இடத்தையும், சீனா மூன்றாவது இடத்தையும் பிடிக்கும்.

தனிமனித ஆயுட்காலம் உயரும். இதனால், மொத்த மக்கள் தொகையில், கால் பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.