2025ம் ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுமா இந்தியா?

புதுடெல்லி: வரும் 2025ம் ஆண்டில், ஜப்பான் நாட்டை விஞ்சி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உருவாகும் என்பதாக அறிக்கை(‍ஐஎச்எஸ் மர்கிட்) ஒன்று தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்த 2019ம் ஆண்டில் இந்தியா பிரிட்டனை விஞ்சி, உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை அடையும். இதனையடுத்து வரும் 2025ம் ஆண்டில், ஜப்பானையும் விஞ்சி உலகின் 3வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையைத் தொடும்.

நரேந்திர மோடி அரசு மத்தியில் மீண்டும் பதவியேற்றுள்ளதை அடுத்து வெளியிடப்பட்ட சமீபத்திய வருடாந்திர பொருளாதார சர்வேயில், 2025ம் ஆண்டு இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த 2019ம் ஆண்டில் இருக்கும் பொருளாதார நிலை அளவான 3 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பிலிருந்து, 2025ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பிற்கு உயர்த்தி, இந்தியாவை உலகின் உயர் மத்தியதர வர்க்க வருவாய் கொண்ட நாடாக மாற்றுவதே லட்சியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா, ஜப்பானை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை எட்டும்.

மேலும், தற்போதைய இந்திய நுகர்வோர் சந்தை மதிப்பை 1.9 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பிலிருந்து, வரும் 2025ம் ஆண்டில் 3.6 டிரில்லியன் டாலர் மதிப்பாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.