முதல் ரஃபேல் போர் விமானம் அடுத்த மாதம் டெலிவரி! பிரான்ஸ் அதிபர் தகவல்

பாரிஸ்:

முதல் ரஃபேல் போர் விமானம் அடுத்த மாதம் (செப்டம்பர்) இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்து உள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு  சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு  பாரிஸ் நகர விமான நிலையத்தில் அவரை பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்றார். மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  சான்டிலி பகுதியில் உள்ள  அரண்மனையில் மோடியை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றார். அரண்மனையின் தனி அறையில் இருவரும் தனியாக உரையாடினர்.  பின்னர்  பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். சுமார் 90 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூறியதாவது:-

காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது நாடு தலையிடவோ, வன்முறையை தூண்டவோ கூடாது. அந்த பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து  பாகிஸ்தான் பிரதமரிடமும் பேச உள்ளேன். அப்போது காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை  வலியுறுத்துவேன் என்றார்.

பயங்கரவாதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். பாதுகாப்பு துறையில் எங்கள் உறவுகள் நட்புடன் உள்ளது என்பதையே இந்த சந்திப்பு காட்டுகிறது.

பிரெஞ்சு நிறுவனங்களுக்கு இந்தியா சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. திறன் மேம்பாடு, விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் மகத்தான ஒத்துழைப் புக்கான வாய்ப்பு உள்ளது. ‘மேக் இன் இந்தியா’வுக்கு நாங்கள் உதவுவோம் என்றார்.

இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள 36 ரஃபேர் போர் விமானத்தில், முதல் ரஃபேல் போர் விமானம் அடுத்த மாதத்திற்குள் இந்தியாவை எட்டும் என்றும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு மக்ரோன் கூறினார்.

ஏற்கனவே பிரெஞ்சு விமான நிறுவனமான டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா பிரான்சுடன் ஒரு அரசுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் (ஐஜிஏ) கையெழுத்திட்டுள்ளது.அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.