இந்திய ஆடைகளுக்கான நிலையான அளவு உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்

அகமதாபாத்:

அமெரிக்கா, இங்கிலாந்து போல் இந்தியாவும் உடைகளுக்கான நிலையான அளவை உருவாக்கும் என மத்திய நூற்பாலைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.


குஜராத்தில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் நூற்பாலை குறித்து பேசிய அவர், “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போல நிலையான ஆடை அளவை உருவாக்கும் வகையில் ‘சைஸ் இந்தியா’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுபோன்று நிலையான ஆடை அளவை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் ஆடையக அளவு 42.44 மற்றும் எக்ஸ் எல்-என உள்ளது. உள்ளூர் சந்தை தேவை குறித்து அளவீடு செய்ய நூற்பாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் ‘சைஸ் இந்தியா’ திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இதுபோன்ற திட்டத்தை நம் நாட்டில் செயல்படுத்துவது இதுவே முதல்முறை.

கடந்த நான்கரை ஆண்டுகளில் குஜராத்தில் நூற்பாலை தொழில்நுட்பத்தை புதுப்பிப்பதற்காக ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டது.இதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடு வந்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சப்ளை செய்யும் அளவுக்கு நம் நாட்டில் ஆடை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், உள்ளூர் சந்தையின் பலம் குறித்து இதுவரை சிந்திக்கவே இல்லை.

உள்ளூர் தேவை குறித்து புள்ளிவிவரத்தை சேகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது வடிவமைப்பு மற்றும் நூற்பாலை தொழிலை வலுப்படுத்த உதவும்.

இவ்வாறு மத்திய நூற்பாலைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார்.

இந்திய ஆடைகளுக்கான நிலையான அளவு உருவாக்கப்படும்: மத்திய நூற்பாலைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்