2வது ஒருநாள் போட்டி – இந்திய அணி 107 ரன்களில் வெற்றி!

விசாகப்பட்டணம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்களைக் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

டாஸ் வென்ற விண்டீஸ் அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது தவறான முடிவாகிப்போனது. துவக்க வீரர்களான ரோகித்தும் ராகுலும் நிலைத்து நின்று ஆடி, முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் ஆட்டத்திற்கு பதிலடி கொடுத்தனர்.

ரோகித் 138 பந்துகளில் 159 ரன்களும், ராகுல் 104 பந்துகளில் 102 ரன்களும் அடித்தனர். கேப்டன் கோலி டக் அவுட் ஆனார்.

ஷ்ரேயாஸ் 32 பந்துகளில் 53 ரன்களும், ரிஷ்ப் பண்ட் 16 பந்துகளில் 39 ரன்களும் அடித்தனர். ரன்கள் 400ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜாவை தாமதாக களமிறக்கியதால், 387 ரன்களே கிடைத்தன.

சாத்தியமற்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப் மற்றும் பூரான் ஆகியோர் நம்பிக்கை அளித்தனர். அவர்கள் இருவரும் 70 ரன்களுக்கு மேல் அடித்தனர். பூரான் 47 பந்துகளில் 75 ரன்களை அடித்தார்.

ஆனால், ஓரளவிற்கு மேல் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. முடிவில் 43.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 280 ரன்களுக்கு தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது அந்த அணி.

இந்தியா தரப்பில் ஷமி மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தாகூருக்கு 1 விக்கெட் கிடைத்தது.