ராஜ்காட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, கோப்பை வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது இந்தியா.

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதல் போட்டியைப் போலவே இம்முறையும் பவுலிங் தேர்வுசெய்தது.

ஆனால், இந்தமுறை இந்திய அணி தீர்க்கமாக களமிறங்கியது என்றே கூற வேண்டும். இந்தியாவின் தொடக்க இணை வலுவாக களத்தில் நின்றது. கடந்தமுறை 10 ரன்களில் பெவிலியன் திரும்பிய ரோகித், இந்தமுறை 42 ரன்கள் அடித்தார்.

ஷிகர் தவான் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு 96 ரன்களை அடித்து, வெறும் 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். கேப்டன் விராத் கோலி 78 ரன்களை அடித்து, இம்முறையும் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பாவிடம் சிக்கினார்.

ஆட்டத்தின் போக்கை, ரஷிப் பன்ட்டிற்கு பதில் விக்கெட் கீப்பராக களமிறங்கிய ராகுல் மாற்றினார். அவர் 52 பந்துகளில் அடித்த 80 ரன்கள்தான், இந்திய அணியின் ஸ்கோரை 340 என்ற பெரிய எண்ணிக்கைக்கு கொண்டு சென்றது. ஜடேஜா 16 பந்துகளில் 20 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி மொத்தமாக 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவ் ஸ்மித் 98 ரன்களை அடித்து மிரட்டினார். ஆனால், அவரை குல்தீப் யாதவ் திருப்பியனுப்பினார். 2 ரன்களில் சத எண்ணிக்கையை கோட்டைவிட்டார் குல்தீப்.

மார்னஸ் 46 ரன்களும், ஆரோன் ஃபின்ச் 33 ரன்களும் அடித்தனர். வார்னர் 15 ரன்களுக்கே அவுட்டானார். இந்திய தரப்பில் 1 விக்கெட் மட்டுமே எடுத்தாலும், பும்ரா மிகவும் எகனாமிக்காக பந்து வீசினார். 9.1 ஓவர்களை வீசிய அவர் கொடுத்தது 32 ரன்கள் மட்டுமே.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, 10 ஓவர்களில் கொடுத்தது 77 ரன்கள். ஜடேஜா 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 58 ரன்களைக் கொடுத்தார்.

இரு அணிகளுக்கு இடையிலான கோப்பை தீர்மானிக்கக்கூடிய இறுதி ஒருநாள் போட்டி, 19ம் தேதி ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது.