ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்று அசத்தியது.

இப்போட்டியிலும் அரைசதம் அடித்த ஓபனிங் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ராகுல், வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பெரிதாக ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எனவே, அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் கட்டாயம் இந்திய பேட்ஸ்மென்களுக்கு இல்லாமல் போனது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஆல்ரவுண்டர் ஜடேஜா மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

பும்ரா மற்றும் முகமது ஷமியும் தங்களின் பணியை செவ்வனே செய்தார்கள். யுவேந்திர சஹலின் பந்துவீச்சு எதிர்பார்த்த வகையில் கைகொடுக்கவில்லை.

பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் ஷர்மா இந்தமுறையும் சொதப்பினார். அவர் 8 ரன்களுக்கெல்லாம் நடையைக் கட்டினார். கேப்டன் கோலி எடுத்தது வெறும் 11 ரன்கள்தான்.

கடந்தமுறை போலவே, ராகுலும் ஷ்ரேயாஸும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். ராகுல் 50 பந்துகளில் 57 ரன்களை அடித்து இறுதிவரை அவுட்டாகவில்லை. அவர் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்தார்.

ஷ்ரேயாஸ், 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 33 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசியில் வந்த சிவன் துபே 8 ரன்கள் எடுத்தபோது இந்தியா வெற்றிபெற்றது. அவர் ஒரு சிக்ஸர் அடித்தார்.

இந்தியாவின் சார்பாக 6 சிக்ஸர்களும், நியூசிலாந்தின் சார்பாக 5 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.

5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி தற்போதைய நிலையில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.