வெலிங்டன்: மூன்றாவது டி-20 போட்டியை வென்றதன் மூலமாக, நியூசிலாந்திற்கு எதிராக முதன்முதலாக டி-20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா.

ஆனால், இந்த வெற்றி சூப்பர் ஓவர் முறையின் மூலமாக பெறப்பட்ட வெற்றியாகும்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக டாஸ் வென்ற நியூசிலாந்து, இந்தமுறை இந்தியாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை அடித்தது.

அதிகபட்சமாக, ரோகித் ஷர்மா 40 பந்துகளில் 65 ரன்களை அடித்தார். விராத் கோலி 38 ரன்களும், ராகுல் 27 ரன்களையும் அடித்தனர்.

180 ரன்கள் இலக்கை நோக்கி, பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், மார்ட்டின் கப்தில் 31 ரன்களை அடித்து நல்ல துவக்கம் தந்தார். பின்னர், ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட கேப்டன் வில்லியம்சன் பேயாட்டம் ஆடினார்.

அவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடித்து 48 பந்துகளில் 95 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில், இந்திய வீரர் பும்ராவின் பந்துவீச்சை நியூசிலாந்து அணியினர் நன்றாக பதம்பார்த்துவிட்டனர் என்றே கூறலாம்.

அவர், 4 ஓவர்களை வீசி 45 ரன்களைக் கொடுத்தார். கடைசி கட்டத்தில் அணியைக் காப்பாற்றியவர் முகமது ஷமி. அவர் இறுதி ஓவரில் வில்லியம்சன் மற்றும் ராஸ் டைலர் விக்கெட்டுகளை எடுத்து, வெற்றியை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நியூசிலாந்து அணியை தடுத்து நிறுத்தினார்.

இதன்மூலம், ஸ்கோர் ‘டை’ ஆகவே, ஆட்டம் சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. பும்ராதான் இந்த வாய்ப்ப‍ையும் பெற்றார். பும்ராவின் ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டன.

எனவே, ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரோகித்தும் ராகுலும் களம் புகுந்தனர். நியூசிலாந்தில் டிம் செளதி பந்துவீசினார். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, வெற்றிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், தனது அனுபவ ஆட்டத்தை வெளிக்காட்டிய துணைக் கேப்டன் ரோகித் ஷர்மா, அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை கடைசிப் பந்தில் அடித்து, டி-20 கோப்பையை இந்திய அணிக்கு உரித்தாக்கினார்.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 3 தொடர் வெற்றிகளைப் பெற்றதன் மூலம், இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.