ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டி-20 போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா.

ஃப்ளோரிடாவின் சென்ட்ரல் ப்ரோவார்டு ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பொல்லார்டு மட்டுமே 49 ரன்களை அடித்தார். ஆனால், அவர் எடுத்துக்கொண்ட பந்துகளும் 49. அடுத்து 16 பந்துகளில் பூரான் 20 ரன்களை அடித்தார் . மற்ற அனைவரும் ஒற்றை இலக்கம் அல்லது டக் அவுட். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி.

பின்னர் களமிறங்கிய இந்தியா ஒன்றும் எளிதாக இந்த இலக்கை எட்டிவிடவில்லை. தன் பங்கிற்கு 6 விக்கெட்டுகளை இழந்தே இந்த ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மா எடுத்த 24 ரன்கள்தான் இந்தியா சார்பில் அதிகபட்ச ரன்கள். கேப்டன் கோலி 19 ரன்கள் அடித்தார். மணிஷ் பாண்டே 19 ரன்கள். ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார்.

இறுதியில் 17.2 ஓவர்களை வரை ஆடியே இந்தியா இலக்கை எட்டியது. இந்தியா சார்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் சார்பில் காட்ரில், சுனில் நரைன் மற்றும் கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.