நாக்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றி, கோப்பையை ஏந்தியது இந்திய அணி.

முதல் 2 போட்டிகளில் தலா 1 வெற்றி என்ற விகிதத்தில் தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் கோப்பைக்கான 3வது போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

ரோகித்தும் தவானும் தங்களின் பங்களிப்பை சரியாக செய்யவில்லை. எனவே, ராகுலும் ஷ்ரேயாஷும் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். ராகுல் 35 பந்துகளில் 52 ரன்களும், ஷ்ரேயாஸ் 33 பந்துகளில் 62 ரன்களும் குவித்தனர்.

மணிஷ் பாண்டே 22 ரன்களை அடிக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது இந்தியா.

பின்னர் சற்று கடின இலக்கை விரட்டிய வங்க தேசத்திற்கு முகமது நெய்ம் நம்பிக்கை அளித்தார். அவர் 48 பந்துகளில் 81 ரன்களை விளாசினார். முகமது மிதுன் 27 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்கள் எவராலும் இரட்டை இலக்க ரன்களைக்கூட எட்ட முடியவில்லை.
எனவே, 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது வங்கதேச அணி.

இந்தியா தரப்பில் தீபக் சஹார் 6 விக்கெட்டுகளை அள்ளினார். 3.2 ஓவர்கள் வீசிய இவர் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவம் துபே 3 விக்கெடுடகளை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் டி-20 கோப்பையை வென்றது இந்திய அணி. அடுத்து டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.