புதுடெல்லி: உலகிலேயே அதிக குழந்தை இறப்பு சம்பவங்கள் (5 வயதுக்கு உட்பட்ட) நிகழ்ந்த நாடாக இந்தியா திகழ்ந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் இந்த இறப்பு விகிதம், பணக்கார மற்றும் ஏழை மாநிலங்களுக்கிடையே பெரியளவில் மாறுபட்டதாயும் இருக்கிறது என்ற தகவல் ஆய்வில் வெளிவந்துள்ளது.

கடந்த 2000 – 2015 வரையிலான காலகட்டத்தில், 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளின் மரணத்திற்கு என்ன காரணங்கள் என்ற விபரங்கள் அடங்கிய தரவை ஆய்வு செய்தது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற ஆராய்ச்சி நிறுவனம்.

அதன்படி, கடந்த 2000ம் காலகட்டத்தில் ஆண்டிற்கு 2.5 மில்லியன் குழந்தைகள் (5 வயதுக்குட்பட்ட) மரணம் என்ற நிலை, 2015ம் ஆண்டில் 1.2 என்பதாக குறைந்தது. ஆனாலும், இதுதான் உலகின் வேறு எந்த நாட்டை விடவும் அதிகம்.

ஆனால், இந்த இறப்பு விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் அதிகம் மாறுபடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழும் குழந்தை இறப்பு விகிதம் கோவா மாநிலத்தோடு ஒப்பிடுகையில் 7 மடங்கு அதிகம்.