கொழும்பு:

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் முறையே 9 விக்கெட், 3 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் 4வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இலங்கை அணியை முதலில் பந்து வீச பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

இந்திய அணியில் விராட் கோலி(131 ரன்கள்), ரோகித் ஷர்மா(104 ரன்கள்) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். மணிஷ் பாண்டே (50 ரன்கள்) தோனி (49 ரன்கள்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பு காரணமாக இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். மேத்யூஸ்(70 ரன்கள்) மட்டும் ஓரளவு தாக்கு பிடித்தார்.

42.4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இலங்கை அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.