மவுண்ட் மவுங்கானு: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியையும் இந்தியா வென்று தொடரை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் 35 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 93 ரன்கள் என்று இருந்தது.

எனவே, நிச்சயம் அணி 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரோகித் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது காயம் காரணமாக வெளியேறினார். அப்போது இந்தியா 138 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் நியூசி.யின் அசத்தலான பவுலிங்கால் இந்தியா ரன்கள் குவிக்க இயலவில்லை. முடிவில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்தது.

இதையடுத்து, 164 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசி. களம் இறங்கியது. தொடக்கத்திலேயே நியூசிலாந்து இந்திய பந்துவீச்சால் தடுமாறியது. 7 ரன்கள் இருந்த போது குப்தில் வெளியேறினார். அணியின் ஸ்கோர் 17 ஆக இருந்த போது முன்ரோவும் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ப்ருசும் வெளியேற 17 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து. 4வது விக்கெட்டுக்கு செய்வேர்ட்டும், டெய்லரும் அழகான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 116 ரன்கள் என்ற போது இந்த கூட்டணி பிரிந்தது.

அதன்பின்னர் இந்திய பந்துவீச்சை திறம்பட நியூசிலாந்து வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சால் அரண்டு போயினர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக். இழப்புக்கு 156 ரன்களே நியூசி. எடுத்தது. இதன் மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி டி 20 போட்டியையும் வென்றதால் தொடரை 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தி இருக்கிறது இந்தியா. ஆட்ட நாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக கேஎல் ராகுலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.