டெல்லி: இந்தியாவில், முக்கிய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வாட்ஸ் அப் செயலி மூலம் எப்படி உளவு பார்க்கப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

பேஸ்புக் என்ற நிறுவனம் தான் வாட்ஸ் அப் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்பது ஒரு சைபர் செக்யூரிட்டி நிறுவனம். அந்த நிறுவனத்தின் மென்பொருள் தான் பெகாசுஸ் என்பதாகும்.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் பெகாசுஸ் ஒரு வைரசாகும். இந்த வைரசை வீடியோ கால் அழைப்பு வழியாக ஒருவரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க முடியும். ஒருவருக்கு போன் செய்யும் போது, அந்த நபர் அழைப்பை ஏற்கவில்லை என்றாலும் பெகாசுஸ் உளவு பொருள் அதில் நுழைந்து உட்கார்ந்து விடும்.

அதன்பிறகு, நாம் யாரும் எதிர்பாராத ஒன்று நடக்கும். அதாவது, நமது செல் போனில் பேசும் விவரங்கள், கேமரா செயல்பாடுகள், சங்கேத வார்த்தை என அனைத்தும் உளவு பார்க்கப்பட்டு விடும்.

இதை பயன்படுத்தி தான், இந்தியாவில் உள்ள முக்கிய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் சமூக ஆர்வலர்கள் 17 பேர் உளவு பார்க்கப்பட்டுள்ளனர்.

இந்த உளவு என்ற விவகாரம் எப்படி வெடித்தது என்பதே சுவாரசியமான ஒன்று. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி. ஐக்கிய அரபு அமீரக நாட்டின் சமூக ஆர்வலர் அகமது மன்சூர் என்பவரின் ஸ்மார்ட்போனுக்கு ஒரு தகவல் போயிருக்கிறது. ஆனால், அந்த நம்பரை அவரால் அறியமுடியவில்லை.

இதையடுத்து, அவர் அந்த எண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். கனடாவின் உளவு கண்காணிப்பகத்திடம் தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகு தான் பெகாசுஸ் என்ற உளவு வைரஸ் இருப்பது உலகத்துக்கு அறியப்பட்டது.

ஒரேயொரு அழைப்பு மூலமே, அவரது செல்போனுக்குள் ஊடுருவி விடும். இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் முக்கிய நபர்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், எனவே இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியிருக்கிறது.

ஆனால் என்எஸ்ஓ நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அரசு நிறுவனங்களுக்கு மட்டும் தான் அந்த மென்பொருள் விற்கப்பட்டாக கூறி இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளே இதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த உளவு வைரஸ், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் ஆயிரத்து 400 பேரின் செல்போன்கள், வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.