ஆள் கடத்தலுக்கு எதிராக போராடும் இந்திய பெண்ணுக்கு விருது வழங்கி கௌரவித்த அமெரிக்கா

மனித கடத்தலுக்கு எதிராக போராடி வரும் இந்திய-அமெரிக்கப் பெண்ணான மினால் பட்டேல் டேவிஸுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் விருது வழங்கப்பட்டுள்ளது.

minal

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டர்னருக்கு மனித கடத்தலை தடுக்கும் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டு வருபவர் மினால் பட்டேல் டேவிஸ். கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு அந்நாட்டு அதிபரின் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அமைச்சர் மைக் பாபம்பியோ இந்த விருதை மினாலுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் மனித கடத்தலை தடுக்கும் பிரிவிற்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து மினால் பட்டேல் டேவிஸ் கூறும் போது, “இந்த விருதுப் பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் நான் அமெரிக்காவில் தான் பிறந்தேன். பெண்ணாக இருந்தாலும் துணிச்சலாக மனிதக் கடத்தலுக்கு எதிராகப் போராடி வருகிறேன். மனிதக் கடத்தலைத் தடுக்க பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

அமெரிக்காவில் ஆள்கடத்தல் அதிகளவில் நடந்து வரும் வேளையில் அதனை தடுக்கும் விதமாக ஒரு குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த குழுவில் மினால் பட்டேல் 2015ம் தேதி சேர்ந்தார். உள்நாடு முதல் சர்வதேச அளவிலான மனித கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கையில் மினால் பட்டேல் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், இந்தியா மற்றும் கனடாவிற்கு வருகை தந்த மினால் மனித கடத்தலை தடுக்கும் மாநாட்டில் பங்கேற்றார்.