பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இந்திய வில்வித்தை சங்கம்

புதுடெல்லி: வில்வித்தைக்கான உலகளாவிய அமைப்பு, இந்திய வில்வித்தை சங்கத்தை உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜுலை 31ம் தேதி வரை கால அவகாசமும் வழங்கியுள்ளது.

அந்த காலக்கெடுவுக்குள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய வில்வித்தை சங்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாயும், உலகளாவிய அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பட்டியலிலிருந்து இந்திய வில்வித்தை சங்கம் நீக்கப்பட்டதானது, இந்திய வில்வித்தை வீரர்கள் உலகளாவியப் போட்டிகளில் கலந்துகொள்வதை தடைசெய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட போட்டிகளில் இந்திய வில்வித்தை வீரர் – வீராங்கணைகள் தாராளமாக கலந்துகொள்ளலாம்.

உலகளாவிய வில்வித்தை அமைப்பின் விதிமுறையின்படி, இந்திய வில்வித்தை சங்கத்தில், நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, அதன்பொருட்டுதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.