மும்பை

ந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   அதிலும் மும்பை நகரில் தாராவி பகுதியில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது.  இதற்கு முக்கிய காரணம் தாராவி என்பது ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதி என்பதாகும்.  இந்த பகுதியில் 100 சதுர அடிக்குள் சுமார் 12 பேர் வரை வசித்து வருகின்றன.   சுகாதார வசதிகளும் இங்கு மிகவும் கீழ்த்தரமான நிலையில் உள்ளன.

இன்று டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா ஒரு மாநாட்டில் காணொளி மூலம் கலந்துக் கொண்டார்.   இந்த மாநாட்டில் அவர் எதிர்கால கட்டுமானம் மற்றும் திட்டமிடல் குறித்து உரையாற்றினார்.   டாடா தனது உரையில் குடிசை பகுதிகள் குறித்தும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா, “இந்தியாவில் குடிசை பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்றதாக உள்ளது.  இத்தகைய குடிசைப்பகுதிகளில் மக்கள் வசிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாகும்.    குடிசைகளை அகற்றி அவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.  அதே வேளையில் வேறு இடத்தில் மற்றொரு புதிய குடிசைப் பகுதி உருவாகிறது.

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கொள்கைகளை மறு சீராய்வு செய்ய வேண்டும்.  அதற்குப் பதிலாக அடுக்கு மாடி குடியிருப்புக்கள் என்னும் பெயரில் உயரமான குடிசைப்பகுதிகளை உருவாக்கக் கூடாது.   குடிசைப் பகுதிகளில் உள்ளதைப் போல் இங்கும் நோய் பரவுதல் அதிகமுள்ளது.  கொரோனா வைரஸ் இது குறித்து விழிப்புணர்வை உண்டாக்கி இருக்கிறது.

குடிசைப்பகுதிகளில் சுத்தமான காற்று மற்றும் போதுமான இடவசதிகள் இல்லாததால் கொரோனா போன்ற நோய்கள் அதிகம் பரவுகின்றன.  கட்டிடம் அமைப்போரும் கட்டிடக் கலை வல்லுநர்களும் இந்தியாவில் குடிசைகள் உள்ளது குறித்து வெட்கப்பட வேண்டும்.  தற்போதைய சவாலை ஏற்றுக்கொண்டு குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை உருவாக்க வேண்டும்” என உரையாற்றினார்.